
பொங்கு தமிழ் எங்கும் பொங்கும் !
விழி கொண்டெழுகிறோம் - விடுதலை
மொழி கொண்டெழுகிறோம்,
பனியும், காற்றும்
படர்ந்து வரும் எதிரி
நரியின் கூட்டும்
நம்மை என் செய்யும் இங்கே!
விண்வெளியில் பறக்கும்
விழிதிறந்த நீலப் புலி வானேறும்,
விடுதலையின் விடைவரும் காலம்
உலகின் மூலை முடுக்கெங்கும் தீ மூட்டும்.
அண்ணன் புதுவையே! கவி
கொண்டணைத்த புதுமையே!
புறப்பட்டோம்
ஒரு வழி
ஒரு தலைக் குடைக்கீழ்
எழுகிறது தமிழீழத்தமிழ்.
பிஞ்சும் கூனும் கிழமும்
நெஞ்சு நிமிர்த்தி
கூடுடைத்து
விழுது கொண்டு
வீதியிறங்கி வேர் தேடி வரும்.
விடுதலை கீதம் கேட்கிறது காதில்
தலைமகன் விடுதலை வரிமுகங்கள்
வரவேற்கும் மொழிகேட்கிறது.
பொங்குதமிழ்எங்கும் தங்கும் பொங்கும்!
அதிலிருந்து எழுகிறது தமிழுயிர்.
வருகிறோம்! வருகிறோம்!
வரலாற்றில் தமிழீழம்
வருகிறோம்! வருகிறோம்!
No comments:
Post a Comment